Pages

Sunday, October 11, 2015

நமக்கு வரலாறு முக்கியம் பாஸ் ...!

11.10.2015  வலைப்பதிவர்  திருவிழாவில்.............
என்  வாழ்க்கை வரலாற்றில்  முதல் முறையாக  உணவுக்குழு தலைமை !
என்னால்  முடியும் என்கிற  என்  வாழ்க்கை  மொழியோடும்  உணர்வோடும் ஏற்றுக்கொண்டேன்.

             10.10.2015  மாலையில் தேநீரோடு துவங்கினோம். இரவு  சப்பாத்தி+குருமா.  கிச்சடி+ தேங்காய் சட்டினி.  மசாலாப் பால்  அவ்வளவுதான்.

          11.10.2015  காலையில்  இட்லி, பொங்கல், வடை + தக்காளி சட்டினி, தேங்காய் சட்டினி, சாம்பார்+ காபி  அவ்வளவுதான்.
      காலை 11 மணிக்கு  சுடச்சுட  பேபிகான்  சூப்பு+  சூடான  தேநீரும்!

              மதிய உணவு,  தலைவாழை  இலையில்  பூந்தி+ உப்பு.  காய்கறி கட்லட்,  பனீர்   பட்டாணி பொறியல்,கருணைக்கிழங்கு மசியல், மாஇஞ்சி +கொண்டைக்கடலை  மண்டி,  சேனைக்கிழங்கு வறுவல்,  புடலைக்காய் சிப்ஸ், மாங்காய் ஊறுகாய், அப்பளம், பாயாசம். கருவேப்பிலை சோறு முதலில் அப்புறம்  சோறு+ பருப்பு நெய், சாம்பார், பூண்டுக்குழம்பு, பைன் ஆப்பிள் ரசம், தயிர். தண்ணீர் பாட்டில் வைத்தோம்.

   சாப்பிட்டு கைகழுவியபின்,  முக்கனிகள் (மா, பலா, வாழை மிகச்சிறிய அளவோடு)  சுவீட் பீடா , ஐஸ்கிரீம் எடுத்துக்கொண்டார்கள்.
மாலை 4.30 மணிக்கு சுடச்சுட பணியாரம் இனிப்பு 2, காரம்2+ இஞ்சி டீ.

எல்லாவற்றையும்விட  அன்பான  பரிமாறல் + உபசரிப்பு.
எல்லோரும் ருசித்துவிட்டு  நன்றாகயிருக்கிறது என்று  பாராட்டினார்கள். அத்தனை பாராட்டுகளும்  ருசியாக சமைத்த சமையல் கலைஞர்களுக்கே!

பைவ் ஸ்டார் ஹோட்டல்தான் சமையல் கலைஞர் பெயர்  சொல்வாங்களா? நம்ம கமையல் கலைஞர் பெயர்  இதோ,
    திரு.கரு. கருப்பையா மைனர் அவர்கள்
   பொன்னனூர்___நச்சாந்துபட்டி   944292606

சமையல் கலைஞர்கள்  அனைவருக்கும் கைக்கூப்பிய  நன்றிகள்!
என் இரு கைகளாக செயல்பட்ட கவிஞர் மாலதிக்கும், தங்கை ரோஸ்லினுக்கும் (கவிஞர் வைகறையின்  மனைவி) நன்றிகள்!
புதுக்கோட்டை நர்சரிப்பள்ளிகளின்  தலைவர் திரு.அண்ணாத்துரை (அவரிடம் தான்  பொறுப்பை ஒப்படைத்திருந்தேன்) அவர்களுக்கும் நன்றிகள் பல.....!
மகிழ்ச்சியாக  சாப்பிட்ட அனைவருக்கும் நன்றிகள்!  பொறுப்பை  எனக்கு  வழங்கிய  விழாக்குழு  உறுப்பினர்கள் அனைவருக்கும்  கோடான கோடி நன்றிகள்! மேடை நிகழ்வுகளைப்  பார்க்கமுடியவில்லையே என்ற ஏக்கத்தைப் போக்கிய  பதிவர்களுக்கும் நன்றி!  முழுநிகழ்வுகளையும் பதிவில் பார்த்துவிட்டுதான் இரவு  தூங்கினேன்.
மிக மகிழ்ந்தும் மிக நீண்டும்  வாழ்கிறேன்....உங்கள்  அனைவராலும்!




  

Thursday, October 1, 2015

குவளையாக வேண்டாமே.....குளமாக இருக்கலாமே !

என்  நாகரீகம்   உப்போடு  தொடங்குகிறது .....


கைநிறைய  உப்பை  அள்ளி , ஒரு குவளை  தண்ணீரில் கரைத்து, குடித்துப்பார்த்தால்  எப்படியிருக்கும்  என்று  உங்களுக்குத் தெரியும்! அதே மாதிரி  கைநிறைய  உப்பை அள்ளி, ஒரு குளத்தில் கரைத்து, குடித்துப்பார்த்தால்  சுவையாக  இருக்கும்!  அதே அளவு  உப்புதான், அதிகத் தண்ணீரில்  கரைக்கும்போது  அது  உவர்ப்பாக இல்லை. எந்தப்  பாத்திரத்தில் கரைக்கிறோம்  என்பதில் தான்  சுவையடங்கியிருக்கிறது.  நாமும்  எந்தக்கூட்டத்தில்  கலக்கிறோம்  என்பதில் தான் உணர்வடங்கியிருக்கிறது!
பெரிய  பாத்திரமாக  மனதை  ஆக்கிக்கொண்டு  புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழாவிற்கு  வருகை தந்திட  அன்புடன்  அழைக்கின்றேன் !


குவளையில்  கரையாமல்...புதுக்கோட்டையில்  கரையலாமே....!

நான்  உணவுக்குழு !  நமக்கு  உணர்வோடு  உணவும்  முக்கியம்!
சாப்பாடு  சம்பந்தமா  எப்ப வேணாலும்  பேசலாம்...9842179961 / 7402734201



Friday, September 11, 2015

நமக்கு சோறு முக்கியம் பாஸ் ! 26 /30

பசித்தவனுக்கு  சோறுதான்   கடவுள் !
புதுக்கோட்டை  வலைப்பதிவர்  திருவிழாவில்  நீங்கள்  சாப்பிடும்போது  ஒரு  பருக்கை கூட  தவறி  கீழே விழக்கூடாது.  ஏன்  தெரியுமா ?   அந்த  பருக்கை  வயலில்  நெல்லா  முளைச்சப்ப  உதிர்ந்து போயிருக்கலாம்.  ஆனா  அப்படிப் போகல.... களத்துல  கதிர்  அடிக்கும்போது  காத்துல பறந்து  போயிருக்கலாம். அப்படியும்  போகல..... நெல்லு  அவிக்கும்போது  தீஞ்சு  போயிருக்கலாம். அப்புடியும்  போகல...... அரிசியா  தீட்டும்போது  உடைஞ்சு போயிருக்கலாம்.  அப்புடியும்  போகல......வேற  யாராவது  வீட்டுக்குப்  போயிருக்கலாம். அப்புடியும்  போகாம  நம்ம  வலைப்பதிவர்  திருவிழாவுக்கு  தப்பி  வந்து  அதுலேயும்  உங்க  இலையில  வந்து  உட்காருதுன்னா... அது  உங்களுக்கு  மட்டுமே  ஆன  சோறு  பாஸ் !

ஒரு  பருக்கையே  இவ்வளவு  பயணம்  செஞ்சு  புதுக்கோட்டை  வலைப்பதிவர்  திருவிழாவுக்கு  வரும்போது  நீங்கள்   மட்டும்  என்ன  ........வாங்க   சாப்பிடலாம்
     
             அப்பு  கறீஸ்...அசைவம்  ரொம்ப  நல்லாயிருக்கும்

Thursday, September 10, 2015

நமக்கு சோறு முக்கியம் பாஸ் ! 27 / 30



மக்கள் எதைச் சாப்பிட்டாலும் அதில் பாதி அவர்களுடைய வயிற்றை நிரப்புகிறது. மீதிப்பாதி டாக்டர்களின் வயிற்றை நிரப்புகிறது---மருத்துவ அனுபவம் இது ! பாதி அளவு சாப்பிட்டால் உடம்பும் பாழாகாது, மருத்துவரின் தேவையும் இருக்காது.

நீங்கள் கவலையான மனநிலையில் இருக்கும்போது சாப்பிட்டால், நல்ல உணவுகூட விஷத்தன்மையை ஏற்படுத்திவிடும். அதேசமயம்
நீங்கள் சந்தோஷம் பொங்கும் மனோநிலையில் இருக்கும்போது சாப்பிட்டால், விஷம்கூட தனது முழு பாதிப்பையும் தராமல் நின்றுபோகும் வாய்ப்புள்ளது----இது சாத்தியமும் சத்தியமும் கூட! சாப்பிடும்போது நீங்கள் என்ன மனநிலையில் இருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்!
உங்கள் அனைவரையும் மகிழ்ச்சியான மனநிலையில் வைத்திருக்கும் முழுப் பொறுப்பையும் புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாக்குழுவினர் செய்துவிடுவார்கள். அப்புறம் என்ன...நமக்கு சோறு முக்கியம் பாஸ்! சாப்புட வா....ங்...க!

சரவணபவன் கீழ 2 ம்வீதியில சாஸ்தாபவன் அருகில இருக்கு(சைவம்தான்) நிறைய கஷ்டமர்கள் உண்டு.

Wednesday, September 9, 2015

நமக்கு சோறு முக்கியம் பாஸ் ! 28 / 30

தினமும்  உதிப்பதாலேயே  சூரியன்  அற்பமானதாகி  விடாது !
தினமும்  சாப்பிடறதால  அது  சாதாரண  செயலாகிவிட முடியாது!

வலைப்பதிவர்  திருவிழாவில்  சாப்பிடுவதற்கு  அன்போடு அழைக்கிறோம்.

இன்னக்கி  அசைவத்துக்குதான்  போறோம்----அதுவும்  இரவு உணவு மட்டும்.

                      முத்துப்பிள்ளை  கேண்டீன்

புதுக்கோட்டையில  பச்சப்புள்ளையக்  கேட்டாக்கூட  பளிச்சின்னு  சொல்லும்.
இந்த  கேண்டீன்  முட்டை மாஸ்  சாப்புடாம  ஊருக்குப் போனா  பாவம் வுடாது.
அவிச்ச  முட்டைய  நறுக்கிப்போட்டு தக்காளி  சேர்த்து ஒரு கிரேவி  (அது ரகசியம் )  ஊத்தி சுடச்சுட  வாழை இலையிலக்  கட்டித்தருவாங்க  பாருங்க.......
ச்சே...இலையக்கூட  திண்ணுப்புடலாம்!

இன்னும் தெரிஞ்சுக்க இங்க சொடுக்குங்க

Tuesday, September 8, 2015

நமக்கு சோறு முக்கியம் பாஸ் ! 29

சாப்பிடுவது  வயிற்றை  நிரப்புகிற  செயல்பாடு  மட்டுமல்ல
மற்றவர்களோடு  பகிர்ந்து  கொள்கிற  மனப்பான்மையும்தான்!
சாப்பாட்டோடு  பல  அனுபவங்களையும்  பகிர்ந்து  கொள்ள
புதுக்கோட்டை  வலைப்பதிவர்  திருவிழாவுக்கு  அன்போடு  அழைக்கிறோம்!

Monday, September 7, 2015

நமக்கு சோறு முக்கியம் பாஸ் ! 30

    “ சாப்பிடுவதைச்  சிரத்தையோடும்,  நெறியோடும்  செய்கிறவர்கள்  மற்ற  அனைத்து

செயல்களையுமே  ஒழுங்காகச்  செய்யக்  கற்றுக்  கொள்வார்கள்”

         வாழ்வதற்கு  உண்பவர்கள்  மத்தியில்
         உண்பதற்காக   வாழ்பவர்களை  வரவேற்கிறேன் !

  உணவும்  உணர்வும்--- என்   நாணயத்தின்   இரு  பக்கங்கள் !

       புதுக்கோட்டை  வலைப்பதிவர்  திருவிழாவிற்கு  வருகை தரும்  புத்திசாலிகள்  அனைவரும்  பணி  செய்வதற்கும்     செயல்படுத்துவதற்கும்  உணவு முக்கியம்  பாஸ் !

Monday, July 6, 2015

கொடுக்கும்போது உன் உதடுகளும்
யாசிக்கும்போது என் உதடுகளும்
நனைந்தும் உயிர்த்தும் விடுகின்றன!

Sunday, July 5, 2015

சந்தர்ப்பம் வாய்க்கும்போது சந்திப்பது என்றிருக்காமல், சிலரைச் சந்திப்பதற்காகவே சந்தர்ப்பங்களை உண்டாக்கிக் கொள்ளுங்கள்!
சிலாகிக்க சில விஷயங்களாவது கிடைத்துவிடும்!
குப்பைகளை மட்டுமில்லாது
குறைகளையும் போடத்தான்
குப்பைத்தொட்டிகள்!

Sunday, May 31, 2015


         
        இல்லாத  போதும்
        இருந்து கொண்டேயிருக்கிறது
         இழந்த  காதல்!
        இன்னுமொரு  சாத்தியத்திற்கா?


       ஓரிடத்தில்  பிடுங்கினால்
       வேறிடத்தில்  முளைக்கிறாய்
       ரகசிய  விதியா?  விதையா?


         ஒரு  புதிய  இடத்தில்
          பழகுவதைவிட  வேதனையானது
          ஒரு  பழைய  இடத்தில்
           புதிய  இடம்போல  பழகுவது!
 
     தவறுகள்  புரியும் போது
     ஏற்படுகிற  தடுமாற்றம்தான்
      உண்மையான  மரணம்!


     காணாமல்  போன  நீ
     என்னைத்  தொடர்ந்து கொண்டே  இருக்கிறாய்!
     வாழ்வுக்கும்  சாவுக்கும்  இடையே
     ஒரு  விசித்திரமான  இடத்தில்
     வாழ்ந்துகொண்டே  இருக்கிறாய்
      காணாமல்  போன  நீ

Monday, April 27, 2015

புதிய  புன்னகையை
உருவாக்கிக்கொள்ளலாம்
இந்த  பழைய  உதட்டில்!

Sunday, April 26, 2015

நச்சு-----5

நினைக்காதது  நடந்தால்
நடந்ததையே....
நினைத்துக் கொண்டிருக்கக்கூடாது!
நச்சு----4

வாழத்  தெரிந்தவர்களையும்
தண்டித்து  விடுகிறது....
வாழ்க்கை...சிலநேரங்களில்..
வாழத் தெரியாதவர்களோடு  சேர்த்து!
நச்சு---3

எளிமை....ஆடம்பரத்திற்கான  எதிர்ச்சொல் அல்ல!
ஆணவத்திற்கான  எதிர்ச்சொல்  என்பதுதான்  உண்மை!
நச்சு----2

என்னைத்  தெரியவே  தெரியாதென்று
சாதித்துக்கொண்டிருக்கிறாய்....
என்  எல்லா அடையாள  அட்டைகளையும்
காட்டிய  பிறகும்?
நச்சு---1

படிக்கட்டுகளில்
வழிந்தோடுகிறது
மழைநீர்........
புறக்கணிப்பின்  துக்கம் ததும்பி
படியிறங்கிப்  போகிறதா?
என்  பிரியத்தின்
ஒரு  தனித்த  மழைத்துளி!
உணர்வே  மேலோங்குகிறது
அறிவைக்  காட்டிலும்
பழக்கப்பட்ட  ஒன்றிலில்லை
பழகிவிட்ட  உன்னிடம்!

Sunday, February 15, 2015

காணிக்கை


13.02.2015  அன்று   என்னை  அலைபேசியில்  ஒருவர்  அழைத்து,  நான்   புதுகை CTN  முத்து,  பவித்ரா  வீடியோ  கவரேஜ்  வைத்துள்ளேன்,  உங்களை  நேரில்  சந்திக்கவேண்டும்  என்றார்.

அலுவலகத்திற்கு  வரவழைத்தேன்.   வந்தவர்  மீண்டும்  தன்னை  அறிமுகப்படுத்திக்  கொண்டு,  கடந்த  மூன்று  ஆண்டுகளாக  என்னை  ஆண்டுவிழா  மேடைகளில்  புகைப்படம்  எடுத்ததாகவும்,  என்னுடையப்  பேச்சு  அவரை  மிகவும்  கவர்ந்ததாகவும்  சொல்லி  மகிழ்ந்தார்.

அன்பாகப்  பேசி  எல்லோரையும்  மகிழ்விக்கும்  உங்களுக்கு,  போட்டோகிராபராகிய  என் அன்பு பரிசு  இது  என்று  தந்தார்.   பிரித்துப் பார்த்தால்......வாவ்....அழகு ஜெயா! (மேலே  உள்ள  படம்தான் )

மேடையில்  இல்லாத,  மைக்  பிடிக்காத,  பரிசுகள்  வழங்காத.... வெறும்  ஜெயா....அம்மா  ஜெயா....சூப்பர்!  எல்லையில்லா  மகிழ்ச்சியில்  அந்த  தம்பிக்கு  என்  நன்றிகளைக்  காணிக்கையாக்கினேன்.

நான்  இந்த  உலகை  விட்டுப்  போன பிறகு,  இந்தப்  படத்தை  வைத்துதான்  எனக்கு  மாலை   போட  வேண்டும்  என்று  என்  மகன்களிடம்  கேட்டுக்கொள்ள  வேண்டும் !   அவ்வளவு  புடிச்சிருக்கு.......!

Sunday, February 8, 2015

ஜன்னல் திறந்தவன் எட்டிப்பார்க்கப்படுகிறான்.......அனுபவம்

    இன்று  (25.01.2015)  நடந்த  வீதி  இலக்கியக்  கூட்டத்தில்  கவிஞர்  வைகறை  அவர்கள்  தன்னுடைய  ஜன்னல்  திறந்தவன்  எட்டிப்பார்க்கப்படுகிறான்...கவிதைத்  தொகுப்பை  அன்போடு  வழங்கினார்.

    கூட்டம்  முடிந்து  பேருந்தில்  பயணிக்கும்போதே  படிக்க  ஆரம்பித்து  விட்டேன்.  குழந்தைகளோடே  பழகுபவள்,  குழந்தையாகவே  இருக்க  விரும்புபவள்...   இது  போதாதா   எனக்கு  ஜெய்குட்டியோடு  குதூகலிக்க....!

       பறவை  வரைய  நினைத்தவன்
       வரைய  மறுக்கிறான்
      கோடு  போட்ட  காகிதத்தில்....

பறவைய  சுதந்திரமா  பறக்கவிட  வேண்டாமா?  அதென்ன  கோடு  போட்டப்  பேப்பர்ல  பறக்கவிடுறது...ஜெய்குட்டியின்  பிடிவாதத்தை  ரொம்பவும்  ரசித்தேன்.

      அரிசி  கொத்தும்  காகம்
     விரட்ட  வந்த  ஜெய்குட்டி
     தாமதிக்கிறான்   கொஞ்சம்

நியாயம்தானே..பொம்மைக்கு  சோறு  ஊட்டுற   குழந்தையால  எப்புடி  காக்காவ  விரட்டமுடியும்?  அழகு  குழந்தைத்தனம்.

ஐ  மூனு  கிளி!-----யில்  கவிஞருக்கே  உரிய  தற்குறிப்பேற்றம்,

கிழித்துவிடலாம்---தலைப்பில்  பாரதியின்  நினைவு  நாளை  எப்படியோ(தொலைக்காட்சி  வாயிலாக)  வருகிற/ வளர்கிற  தலைமுறை  அறிந்து கொள்வதில்  உண்டாகும்  மகிழ்ச்சி.  இப்படி  அனைத்து  கவிதையிலும்  கவிஞரின்  உழைப்பு  உன்னதமடைகிறது.

உங்கள்  கவிதை  ஜன்னலைத்  திறந்து  எட்டிப்பார்த்ததில்,  என்  குழந்தைப்  பருவம்  நிழலாடியது.  என்  குழந்தைப் பருவத்தில்  நான்  தக்கவைத்துக்  கொண்டவைகள்,  தவறவிட்டவைகளைக்  காட்டிலும்  அதிகமானவைதான்  என்பதையும்  உணர்ந்து  மகிழ்ந்தேன்.  கவிஞர்  வைகறை  அவர்களுக்கு  உளமார்ந்த  நன்றிகளும்  வாழ்த்துகளும்!

Friday, February 6, 2015

இருக்கை

    25  வருடங்கள்   பேருந்தில்   பயணித்துக்  கொண்டிருக்கிறேன்   என் 

பணியின்  பொருட்டு.   நடத்துனர்  இருக்கைக்  காலியாக  இருந்தால்  அவர் 

வரும்  வரை  அதில்  ஓடிப்போய்  உட்கார்ந்துகொள்ளும்  ரகம்தான்  நான்.      ஆனால்   இன்று  நடத்துனரே  அவர்  இருக்கையில்  என்னை  உட்காரச்சொல்லியும்  நான்  மறுத்துவிட்டேன்.  காரணம்  தோழர்  இரா.எட்வின்  அவர்களின்   அருகம்புல்லேயாயினும்.....(அந்தக்  கேள்விக்கு  வயது 98 )   தலைப்பில்  படித்த  அச்சடிக்கப்பட்டப்  புத்தக  வரிகள்தான்.              
    
        அதைப்  படித்தப்  பிறகுதான்   நான்  அலுவலர் ..என்  சீட்டுல  எப்புடி  நான்   யாரையும்  உட்கார  அனுமதிக்க  மாட்டேனோ,  அப்புடித்தானே  அவரோட  சீட்டும்.....இந்த  உண்மையை   உணர்ந்தேன்.  அடடா  எவ்வளவு  மகிழ்ச்சி  தெரியுமா  எனக்கு!   இனி  அரசுப்  பேருந்து  உள்ளவரை,  நடத்துனர்  இருக்கை  இருக்கும் வரை,  நான்  பயணிக்கும்  காலம்வரை   நடத்துனர்  இருக்கையில்  உட்காரவே  மாட்டேன்.   பையப்  பையப்  புரளும்  சமூகம்.....ன்னு   தோழர்   எழுதியிருந்தாரு   இப்ப  புரளுது  தோழர்.
      
நடத்துனர்க்கிட்ட   அது  உங்களோட  சீட்டு,  அதுல  யாருமே  உட்காரக்கூடாது  என்று  நான்  சொன்னவுடனே  என்னைப்  பார்த்து  ஒரு  சிரிப்பு...பூ..சிரிச்சாருப்  பாருங்க......சொல்லமாட்டேன்    அது  சொர்க்கம்.

Wednesday, February 4, 2015

யாவும் சமீபித்திருக்கிறது; நூல் அனுபவம்






நேற்று தோழர் கடங்கநேரியான் அவர்கள் அவருடைய யாவும் சமீபித்திருக்கிறது

கவிதைத் தொகுப்பை அஞ்சலில் அன்போடும், வாழ்த்துக்களோடும்

அனுப்பியிருந்தார்கள். மிக்க நன்றி தோழர்.

நமக்குத்தான் புத்தகம் கிடச்சுட்டா போதுமே உடனே படித்துவிட்டேன். அடடா...மனிதர்

உணர்ந்துகொள்ள இது மனிதக்கவிதை அல்ல, அதையும் தாண்டி புனிதமானது!

மேகங்களைப் பார்க்கும்போது ஒவ்வொருத்தருக்கும் ஒரு உருவம் தெரியும்ல,

அப்புடித்தான் ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொருத்தருக்கும் ஒரு புரிதல் கொடுக்கும். சூப்பர்

Thursday, January 1, 2015

கதை நான் ......கருத்து நீங்க !

ஒரு  வாத்தியாரு  கிராமத்துல  இருந்த  விவசாயி  ஒருத்தரப்  பாக்கப் போனாராம். விவசாயிக்கிட்ட  ஒரு விளை நிலமும்,  ஒரு  செக்கும்  இருந்துச்சாம்.  வாத்தியாரு  விவசாயிக்கிட்டப் போய், “எப்புடி இரண்டு  வேலையையும்  ஒரே  ஆளாச்  செய்றீங்க?” அப்புடீன்னு கேட்டாராம்.

”செக்குமாடு  ஒரே  வட்டத்துலதானே சுத்திக்கிட்டு  இருக்கும்.  அது  கழுத்துல  ஒரு மணி  கட்டி இருக்கேன்.  மாடு  நின்னுட்டா  சத்தம்  வராது.  உடனே  நான்  ஹாய்...ஹாய்....ன்னு  குரல்  கொடுப்பேன். மாடு  திரும்பவும் சுத்த  ஆரம்பிக்கும். அதுனால  வயல்  வேலை  செய்யிறதுல  எனக்கு  எந்த  இடையூறும்  வராது”  சொல்லிட்டாரு  விவசாயி.

உடனே  வாத்தியாரு,”மாடு  ஒருவேளை  தலையை  மட்டும்  ஆட்டிக்கிட்டு  சுற்றாமல்  நின்றால்கூடச்  சத்தம்  வருமே....அப்ப  என்னா செய்வீங்க?”  கேட்டுவிட்டார்.  உடனே  விவசாயி  சொன்னாராம்.....”என்  மாடு  அப்புடியெல்லாம்  செய்யாது.  அது  என்ன உங்கள  மாதிரி  ரொம்பவாப்  படிச்சிருக்கு....இப்புடியெல்லாம்  குறுக்குத்தனமா  யோசிக்க?”........

கதை  தமா....ஷா....சொன்னாலும்,   கல்வி  குறுக்குவழியை  உருவாக்க  உதவுதா?  இல்லயா?  உண்மையைச்  சொல்லுங்க...........